Saturday, December 7, 2013

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையாக இருக்க வாய்ப்புள்ள ஒரு பழம் கோயிலைத் தேடிக்கொண்டு எங்கள் தேடல் அமைந்தது. இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் ஆய்வுமாணவர் பரந்தாமன், டாக்டர்.பத்மா, நான் ஆகிய மூவரும் நகரை விட்டு கடந்து சென்று வேப்பத்தூர் கிராமத்தை வந்தடைந்தோம். கோயில் இருப்பதற்கான தடயங்களே எனக்கு கண்களுக்குத் தென்படவில்லை.

சற்று அருகில் தான் நாம் செல்லவிருக்கும் கோயில் இருக்கின்றது எனச் சொல்லி பரந்தாமன் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். தூரத்தில் ஒரு நெடிய கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. புதர்கள் மண்டிக்கிடக்க, ஆடுகள் அங்கும் இங்கும் மேய்ந்து கொண்டிருக்க என் கண்களுக்கு அதிசயக்காட்சியாக இக்கோயிலை முதன் முதலாக தரிசித்தேன்.

அமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை. இந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. இன்று ஒறைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது. டாக்டர்.சத்தியமூர்த்தி தலைமையிலான ரீச் அமைப்பு இதன் புணரமைப்புப் பணியைத் தொடங்கியமை பற்றியும் பரந்தாமன் சொல்ல அறிந்தேன்.

தற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பரந்தாமன் குறிப்பிட்டுக் காட்ட அவற்றைப் பார்க்க முடிந்தது. ஆதியில் ஒரு பௌத்த ஆலயமாக இருந்து பின்னர் வடிவம் மாறிய கோயிலாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. ஆய்வாளர்களின் தொடர்ந்து ஆய்வு இக்கோயிலின் ஆரம்ப நிலையைக் கண்டறிய உதவும்.

யூடியூபில் இப்பதிவைக் காண:  Youtube

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

0 comments: