Friday, January 31, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: திருவாவடுதுறை ஆதீன சரசுவதி மகால் நூலகம்





சைவ ஆதீனங்களில் பழமை வாய்ந்தது திருவாவடுதுறை ஆதீனம். திருக்கயிலாயப் பரம்பரை வழி வந்த குருமுதல்வர்கள் இங்கு ஆதீனத்தலைவர்களாக இருந்து இம்மடத்திற்கு உரிமையான கோயில்களையும் கட்டளை மடங்களையும் இன்று வரை பாதுகாத்து சைவ நெறி வளர்த்து வருகின்றனர்.

திருமந்திரம் அருளிய திருமூலர் இங்கு இருந்து பாடல்கள் இயற்றினார் என்பதும் யோகசமாதி அடைந்தார் என்பதனையும் கோயில் ஆதீன வரலாற்றிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.

இந்தத் திருமடத்தின் நூலகம் சிறப்பு வாய்ந்தது. சரசுவதி மகால் எனப் பெயர் கொண்ட இந்த நூலகத்தில் பழமையான சுவடி நூல்கள் பலவும் கிடைத்தற்கறிய சிறந்த பல தமிழ் நூல்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இன்றைய வெளியீடாக மலரும் இந்த விழியப் பதிவில் நூலகத்தில் உள்ள சுவடி நூல்களைப் பற்றிய ஒரு அறிமுகம் வழங்கப்படுகின்றது. ஆதீனப் புலவர் இந்த அறிமுகத்தை வழங்குகின்றார்.  அதில் குறிப்பாக மடாதிபதி என்னும் சொற்றொடர் விளக்கம் என்ற தலைப்பிலான ஒரு சுவடி நூல் பற்றிய அறிமுக விளக்கம் இடம் பெறுகின்றது.  அதில் ஆதீனங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சைவ ஆதீனங்கள் அனைத்தும் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ள முறைகளைப் பின்பற்றியே ஆதீன அலுவல்களை முறைபடுத்துகின்றனர் என்ற செய்தியை இந்த ஒலிப்பதிவின் வழி அறிந்து கொளள முடியும். இந்த நூலை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதீனப் புலர் ஒருவர் ஆதீன கர்த்தரின் கட்டளைப்படி தயாரித்த விஷயத்தையும் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

திருவாவடுதுறை மடத்தின் மற்றுமொரு சிறப்பு இங்கு அனையாத அடுப்பு எப்போதும் இருக்கும் என்பது. தொடர்ந்து அன்னதானம் இங்கு வழங்கப்பட்டு வருகின்றது என்ற செய்தியையும் இந்த பதிவின் வழி நாம் அறியலாம்.

அது மட்டுமல்ல..மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஏட்டுச் சுவடிகளும், பல புராண நூல்களும் நிறைந்த ஒரு நூலகம் இது என்பது இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் விஷயம்.  அதனையும் ஆதீனப் புலவர் பேட்டியில் குறிப்பிடுகின்றார்.

10 நிமிட விழியம் இது . பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=OSrT_rMAxC8

பதிவு செய்யப்பட்ட நாள்: 28.2.2013

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, January 26, 2014

மண்ணின் குரல்: ஜனவரி 2014: பஞ்சவன் மாதேவி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டிபிடித்தனர். அப்போது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடிகளும் கொடிகளும் மரங்களும் முளைத்து ஒரு கோயிலை முழுமையாக மறைத்திருந்தது.

அன்று இந்தத் தொல்லியல் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பத்மாவதி அவர்களும் ஒருவர்.

கடந்த ஆண்டு(2013) மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் கால கோயில்களைக் காணும் ஒரு முயற்சியாக  டாக்டர். பத்மாவதி, இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன், நான் ஆகியோர் சென்றிருந்த போது குறிப்பிடத்தக்க சில இடங்களைக் காண வேண்டும் என ஒரு பட்டியல் போட்டுச் சென்றோம். அதில் ஒன்றே பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி கோயில்.

இந்தக் கோயில் 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் அறியப்பட்டு முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம். பழுவேட்டறையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவி மாவேந்தன் ராஜராஜ சோழனின் துணைவியர்களில் ஒருவர். ராஜேந்திர சோழனின் சிற்றன்னை. தன் சிற்றன்னை நினைவாக ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் இது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இக்கோயில் கண்டெடுக்கப்பட்டபோது இக்கோயிலைச் சுத்தம் செய்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டியது பெரிய காரியமாக இருந்திருக்கின்றது. இந்தப் பெரும் பணியை குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இவர்கள் கோயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு குழு கோபுரப் பகுதியைச் சுத்தம் செய்து மரம் செடி கொடிகளையெல்லாம் வெட்டியெடுத்திருக்கின்றார்கள். இன்னொரு குழு கோயில் சுற்றுப் புரத்தில் மண்டிக் கிடந்த காடுகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றாரகள். டாக்டர்.பத்மாவும் சிலரும் கோயிலுக்குள் கிடந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தி சிலைகளைச் சுத்தப்படுத்தி பிரகாரப்பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள். அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயில் முழுமையையும் தூய்மைப் படுத்தி கோயிலை வழிபாட்டுக்கு உகந்த வகையில் புத்துயிர் கொடுத்திருக்கின்றார்கள்.

பின்னர் இக்கோயிலை பராமரிக்கும் பொறுப்பு அவ்வூர் மக்களுக்கே என அமைத்து கொடுத்து வந்திருக்கின்றனர். தற்சமயம் கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது வர்ணங்களுடன் கோபுரம் காட்சியளிக்கின்றது.

கோயிலுக்குள் செல்லும் போது வௌவால்கள் நம்மைக் கடந்து பறந்து செல்கின்றன. கோயிலின் சுற்றுப்புறச் சுவர் அனைத்திலும் மிகத் தெளிவான  கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்டு விட்டன.

இப்பதிவின் முதல் சில நிமிடங்கள் கோயிலைக் காணலாம். பின்னர் கோயிலின் உட்புறத்தில் இருக்கும் பழுவேட்டறையர் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட நந்தியைக் காணலாம். அதோடு
பள்ளிப்படை என்பது என்ன?
இறந்தவரின் உடலை எவ்வாறு தயார் செய்வர்?
இந்த சடங்கு முறை எந்த  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது?
..போன்ற விவரங்களை டாக்டர்.பத்மா தொடர்ந்து வழங்குவதையும் காணலாம்.

அற்புதமான வடிவில் அமைந்த சிலைகள் இக்கோயிலின் வெளிப்புறத்தில் காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயிலின் கற்பக்கிருகத்தின் வாசலில் இரண்டு துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. இவையும் பழுவேட்டறையர் கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை.

கோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கின்றது.


யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=T6bTOyTCGoM

புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Tuesday, January 21, 2014

தைப்பூசம்: பத்து மலை (பகுதி3)


பத்துமலை என்பது இயற்கையின் அதிசயம். ஊழிக்காலத்தில் கொப்பளித்து எழும் தீப்பிழம்பிலிருந்து வெடித்த சிறு குமிழி பத்துமலையாக வடிவெடுத்துள்ளது. இவ்வெடிப்பின் ஒரு வாயில் மண்ணையும், மற்றொன்று விண்ணையும் இணைக்கும் விதமாக அமைந்திருப்பதால் புழுக்கமின்றி காற்று இயற்கையாகப் பாய்ந்து முருகன் ஆலயத்தைக் குளிர்விக்கிறது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி முருகன் இவ்வகையில் மிக அழகான குன்றுகளாகப் பார்த்து இருக்கிறான்.

முருகன் சந்நிதி செல்ல, சொடுக்குக!

Monday, January 20, 2014

தைப்பூசம், பத்துமலை, மலேசியா (பகுதி 2)

அலகு குத்துதல், மயில் காவடி, பால்குடம்

விழியம் காண!

Sunday, January 19, 2014

பத்துமலை தைப்பூசம் (பகுதி 1)

பத்துமலை அடிவாரத்தில் தைப்பூசத்திருவிழாக் காட்சிகள்.

வீடியோ (விழியம்) காண!

Monday, January 13, 2014

தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014ம் ஆண்டு பொங்கல் சிறப்பு வெளியீடு - டத்தோ ஸ்ரீ ச. சாமி வேலு அவர்களுடனான பேட்டி

வணக்கம்.

அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

இன்றைய பண்டிகை நாளின் சிறப்புக்கு அணிகலனாகத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு விழியப் பதிவை வெளியிடுகின்றோம்.



  • மலேசிய இந்தியர் சமூக, மற்றும் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு அரசியல் தலைவர்...
  • மலேசிய அரசியலில் நீண்ட காலம் பங்காற்றியவர்;  மலேசிய அமைச்சில் மிக  நீண்ட காலம் அமைச்சராகப் பணியில் இருந்தவர் என்ற கூடுதல் தகுதியும் கொண்டவர்..
  • சாதனைத் தலைவர் என பெருமையுடன் அழைக்கப்படும் தமிழர்..

டத்தோ ஸ்ரீ ச. சாமி வேலு அவர்கள்!

இந்தியர்களின் மலேசியாவுக்கானத் தொடர்பு என்பது புதிதானதல்ல. கிபி 2ம் நூற்றாண்டு தொடங்கி புத்த மதம் பரப்ப அனுப்பட்ட பலர் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கு வந்தது போலவே மலேசியாவிற்கும் வந்தனர். இந்திய-மலாயா கடல் வணிகமும் அப்போது  மிகப் பிரபலமாக இருந்தது. இது நீண்ட காலம் நீடித்தும் வந்தது. அதன் பின்னர் 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் கடாரம் மீதான படையெடுப்பு இங்கு தமிழர் பாரம்பரியத்தையும் ஹிந்து சமயத்தையும் மேலும் பரவச் செய்தது. அதற்குப் பின்னர் மீண்டும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி வணிகம் செய்யவும், தண்டவாளம் அமைக்கவும் ரப்பர் செம்பனை தேயிலைக் காடுகளில் கூலிகளாகப் பணிபுரியவும், அரசியல் கைதிகளாகவும் என பல்வேறு பரிமாணங்களில் தென்னகத் தமிழர்கள் மலாயா வர அன்றைய ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி வழி அமைத்துக் கொடுத்த்து.

இச்சூழலில் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் மலாயா இருந்தது. இந்த நாட்டின் பெரிய மூன்று பெரும்பான்மை இனங்களான மலாய், சீன, இந்தியர்கள் மத்தியில் படிப்படியாக நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் தோன்ற பல அரசியல் நடவடிக்கைகள் தோன்றியன. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் சுதந்திர தாகம் மிக ஆழகாமப் பரவி பல அரசியல் நிகழ்வுகளுக்கு வித்திட்டன.

மலேசியாவின் அரசியல் கட்சிகளில் மூத்த கட்சி என்ற பெருமையைப் பெருவது மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா)  Malaysian Indian Congress (MIC). 1946ம் ஆண்டு இந்த அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் திரு ஜோன் திவி (1946 - 1947) அவர்கள். இவருக்குப் பின்னர் தலைவர்களாக பட் சிங் (1947 - 1950), ராமனாத செட்டியார்(1950 - 1951), குண்டன்லால் (1951 - 1955), தேசியத் தோட்டப்புற தந்தை என பரவலாக அழைக்கப்பட்ட, தமிழர்களுக்கு மிகப் பல தொண்டாற்றிய துன் வி.தீ.சம்பந்தன் (1955 - 1973), டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வீ மாணிக்கவாசகம் (1973 - 1979) என்ற தலைவர்கள் வரிசையில் ஏழாவது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் டத்தோ ஸ்ரீ சாமி வேலு சங்கிலிமுத்து அவர்கள். 1979 முதல் 2010 வரை, ஏறக்குறைய 31 ஆண்டுகள் இந்த அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கட்சிக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் பெருமை தேடித்தந்தவர் இவர்.

மலேசியத் தமிழர் நலன் தேவைகளுக்காக ம இ கா என்பதோடு நின்று விடாமல் நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். இவரது காலத்தில் தான் மலேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது இருக்கும் மலேசியா முழுமைக்குமான வடக்கு-தெற்கு, கிழக்கு மேற்கு என அனைத்து நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டன. வடக்கில் தாய்லாந்திலிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரை செல்லும் தரம் வாய்ந்த சாலை அமைந்ததும் இக்காலகட்டத்தில் தான்.

மிகச் சாதரண குடும்பத்தில் மிகுந்த ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்து பல்வேறு சிரமங்களுக்கிடையே கட்டிடத்துறை ஆர்க்கிடெக்டாக கல்வியில் தன்னை உயர்த்திக்கொண்டு, சமூக நலனில் ஆர்வம் கொண்டு  அரசியல் கட்சியில் ஈடுபட்டு படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இவர். இன்று இவரது முயற்சியில் மலேசியத் தமிழ் மாணவர் நலனுக்கென்று ஒரு பல்கலைக் கழகம் கடாரம் என்று நாம் முன்னர் அறிந்த கெடா மானிலத்தில் AIMS  என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களது விழியப் பதிவு பேட்டியே இன்றைய பொங்கல் தின சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.

அக்டோபர் மாத இறுதியில்  மலேசியாவில் 28.10.2013 அன்று டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களின் அமைச்சரக அலுவலகத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்டது.

பேட்டி காண்போர்: முனைவர்.சுபாஷிணி , டாக்டர்.நா.கண்ணன்
பேட்டி கேமரா ஒலிப்பதிவு: டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.சுபாஷிணி

இந்தப் பேட்டியில் டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்கள்

  • ம இ கா வின் வரலாறு
  • தமிழிலேயே அரசியல் கூட்டங்கள் நிகழ்த்தும் வகையில் நிகழ்ந்த மாற்றங்கள்
  • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையிலான பல முயற்சிகள்
  • சமூக மேம்பாட்டிற்கு கல்வி
  • தமிழர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் - AIMS  பல்கலைக்கழக உருவாக்கம்
  • தனது இளமை கால அனுபவங்கள்
  • இந்திய சுதந்திர நடவடிக்கைகள் மலாயாவில் ஏற்படுத்திய தாக்கம் 
  • மலேசிய சாலை அமைப்பு  - இந்தியாவில் மலேசிய சாலை அமைப்பு முயற்சிகள்

என பல்வேறு விஷயங்களை விளக்குகின்றார்.


யூடியூபில் இப்பேட்டியைக் காண: http://www.youtube.com/watch?v=iq2F6ZBMRLU


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]