Sunday, August 31, 2014

சிகாகோ தமிழ்ச்சங்க விழா

அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
கடந்த மே மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் சிகாகோ தமிழ்ச்சங்கம் தன்னுடைய 45ஆவது ஆண்டு தொடக்க விழாவையும், சிகாகோவில் இயங்கிவரும் தமிழ்நாடு அறக்கட்டளை(TNF) தன்னுடைய 40ஆவது ஆண்டு விழாவையும் ஒன்றிணைந்து நடத்தின.
அவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து அறிஞர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். திரு. லேனா தமிழ்வாணன், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மகுடேஸ்வரன் முதலியோர் கலந்துகொண்டும், உரையாற்றியும் சிறப்பித்தனர். அவ்விழாவில் பேசுகின்ற அரிய வாய்ப்பை என் தந்தைக்கும், எனக்கும் சிகாகோ தமிழ்ச்சங்க நண்பர்கள் அளித்திருந்தனர்.

அமெரிக்கவாழ் தமிழ் உடன்பிறப்புக்கள் பலரையும் ஒன்றாய்க் காணுகின்ற நல்வாய்ப்பை அத் தமிழ்விழா எங்களுக்கு வழங்கியது எனில் மிகையன்று!
”திரைப்படம் சார்ந்த தலைப்புக்களில் பேசுங்கள்” என்ற கோரிக்கை எங்கள்முன் வைக்கப்பட்டதால், என்ன பேசுவது? என்று ஓரிரு நாட்கள் ரூம் போட்டு(வீட்டிலேயேதான் :-)) யோசித்தோம். ”தொடக்ககாலத் தமிழ்த் திரையுலகம்” பற்றி நான் பேசுகிறேன்; ”கண்ணதாசன் பாடல்களில் இலக்கிய நயம்” குறித்து நீ பேசு” என்றார் என் தந்தை.

”சரிதான்” என்று முடிவு செய்து சிகாகோ நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து எங்கள் தலைப்புக்கள் குறித்துத் தெரிவித்தேன். ”நல்ல தலைப்புகள்!” என்று கூறிய அவர்கள் ”கண்ணதாசன் பாடல்கள் குறித்துப் பேசுவதோடு வேறு சில கவிஞர்களையும் அப்படியே தொட்டுக் காட்டிவிடுங்கள்; அத்தோடு இன்னொரு வேண்டுகோள்; திரைப்படப் பாடல் வரிகள் சிலவற்றையும் முடிந்தால் பாடிக் காட்டிவிடுங்கள்!” என்று கூறி என்னைத் திகைக்க வைத்தனர்.

”இது ஏதடா சிகாகோவிற்கு (என்னால்) வந்த சோதனை!” என்று எண்ணிக்கொண்டு, ”சரி பாடுகிறேன்(!) ஆனால் வந்திருக்கும் கூட்டம் ஓட்டம் பிடித்தால் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது!” என்று சொன்னேன் கவலையோடு. ”உங்கள் உரையைக் கேட்க அமர்ந்திருக்கும் மக்களை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறோம்…அவர்கள் எங்கும் ஓட முடியாது….கவலையை விடுங்கள்!” என்று எனக்கு அவர்கள் தைரியம் அளித்ததன் பேரில் பாடல் வரிகள் சிலவற்றைப் பாடச் சம்மதித்தேன். :-))
இவ்வாறு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் நடைபெற்ற அந்தத் தமிழ்விழா உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடந்தேறியது என்றுதான் கூறவேண்டும். அவ்விழாவை வெற்றி விழாவாக்கிய சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர், நண்பர் திரு. சோமு, தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர், நண்பர் திரு. அறவாழி (வள்ளுவத்திலிருந்த ஈடுபாடு காரணமாக அவர் தந்தையார் வைத்த பெயராம்!) ஆகியோருக்கு இத்தருணத்தில் மீண்டும் என் நன்றிகள்!
இனி, என் தந்தையின் உரையும், என்னுரையும் அடங்கிய காணொளிகள் உங்கள் கவனத்திற்கு…

திரு.ராமமூர்த்தி

மேகலா ராமமூர்த்தி


அன்புடன்,
மேகலா

Tuesday, August 26, 2014

சென்னை அரசு அருங்காட்சியகம்

எழும்பூர் மியூஸியம் என்று எல்லோராலும் சாதாரணமாக குறிப்பிடப்படும் சென்னை அரசு அருங்காட்சியகம், ஆசிய நாடுகளின் மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.  இந்தியாவின் கல்கத்தா அருங்காட்சியகத்து அடுத்து இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமையையும் பெருவது இந்த அருங்காட்சியகம்.


1 மணி நேர பதிவாக இந்த விழியப் பதிவு அமைந்திருக்கின்றது. ஆக நன்கு நேரம் எடுத்துக் கொண்டு அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். இந்தப் பதிவில் அருங்காட்சியக கல்வித்துறை தலைவர் டாக்டர். பாலசுப்ரமணியம் மிக விரிவான விளக்கத்தை தமிழில் வழங்குகின்றார். இந்த விளக்கங்கள் குறிப்பாக

  • அருங்காட்சியகத்தின் ஆரம்ப கால நிலை
  • இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு சேகரிப்புக்கள்.
  • அருங்கலைச்சிற்பங்கள் தொகுப்பின் போது நிகழ்ந்த சிக்கல்கள்
  • இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் 
  • இங்கு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதால் இங்கிலாந்தின் லண்டன் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தமிழகத்திலேயே இருக்கும் நிலை அமைந்த விஷயங்கள்
  • கால நிலைகளில் சிற்ப வடிவங்கள் - பல்லவர், சாளுக்கியர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், நாயக்கர் கால சிற்பங்கள், தற்கால சிற்பங்கள்
  • யட்ஷி, தாந்திரீகம் பற்றிய தகவல்கள்
  • வெங்கலச் சிலை செய்யப்படும் விதம்
  • வெங்கலச் சிற்பங்கள் சேகரிப்புக்கூடம்
  • சைவம், வைஷ்ணவம் வெண்கலச் சிலைகளின் கூடம்
  • காசுகள், சின்னங்கள்
  • சிலைகள் பஞ்ச லோகத்தில் சிலை செய்யப்படுவதன் காரணம்

ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன.


யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=2c01fmD1d88&feature=youtu.be




அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

நெல்லூர் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில்

ஆந்திர மாநிலத்திலிருக்கும் நெல்லூர் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வைணவத்தலம். 11ம் நூற்றாண்டில் ஸ்ரீராமானுஜ மாமுனி ஏற்படுத்திய கோயில் முறைமைகளை இன்றளவும் கடைப்பிடிக்கும் கோயில் இது. ஆந்திர மாநிலத்தில் அமைந்தாலும் இக்கோயிலில் செந்தமிழ்ப் பாசுரம் கருவறையில் ஒலிக்கிறது, இராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆழ்வார் பாசுரங்களை இமயம்வரை ஒலிக்கச் செய்த எம்பெருமானார் நினைவு போற்றுதற்குரியது.

Thursday, August 14, 2014

First audio London Internet TV - மகரந்த சிதரல்கள் பேட்டி









Wednesday, August 6, 2014

குன்னண்டார் குடைவரை கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.


பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண:   

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]