Sunday, August 31, 2014

சிகாகோ தமிழ்ச்சங்க விழா

அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
கடந்த மே மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் சிகாகோ தமிழ்ச்சங்கம் தன்னுடைய 45ஆவது ஆண்டு தொடக்க விழாவையும், சிகாகோவில் இயங்கிவரும் தமிழ்நாடு அறக்கட்டளை(TNF) தன்னுடைய 40ஆவது ஆண்டு விழாவையும் ஒன்றிணைந்து நடத்தின.
அவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து அறிஞர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். திரு. லேனா தமிழ்வாணன், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மகுடேஸ்வரன் முதலியோர் கலந்துகொண்டும், உரையாற்றியும் சிறப்பித்தனர். அவ்விழாவில் பேசுகின்ற அரிய வாய்ப்பை என் தந்தைக்கும், எனக்கும் சிகாகோ தமிழ்ச்சங்க நண்பர்கள் அளித்திருந்தனர்.

அமெரிக்கவாழ் தமிழ் உடன்பிறப்புக்கள் பலரையும் ஒன்றாய்க் காணுகின்ற நல்வாய்ப்பை அத் தமிழ்விழா எங்களுக்கு வழங்கியது எனில் மிகையன்று!
”திரைப்படம் சார்ந்த தலைப்புக்களில் பேசுங்கள்” என்ற கோரிக்கை எங்கள்முன் வைக்கப்பட்டதால், என்ன பேசுவது? என்று ஓரிரு நாட்கள் ரூம் போட்டு(வீட்டிலேயேதான் :-)) யோசித்தோம். ”தொடக்ககாலத் தமிழ்த் திரையுலகம்” பற்றி நான் பேசுகிறேன்; ”கண்ணதாசன் பாடல்களில் இலக்கிய நயம்” குறித்து நீ பேசு” என்றார் என் தந்தை.

”சரிதான்” என்று முடிவு செய்து சிகாகோ நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து எங்கள் தலைப்புக்கள் குறித்துத் தெரிவித்தேன். ”நல்ல தலைப்புகள்!” என்று கூறிய அவர்கள் ”கண்ணதாசன் பாடல்கள் குறித்துப் பேசுவதோடு வேறு சில கவிஞர்களையும் அப்படியே தொட்டுக் காட்டிவிடுங்கள்; அத்தோடு இன்னொரு வேண்டுகோள்; திரைப்படப் பாடல் வரிகள் சிலவற்றையும் முடிந்தால் பாடிக் காட்டிவிடுங்கள்!” என்று கூறி என்னைத் திகைக்க வைத்தனர்.

”இது ஏதடா சிகாகோவிற்கு (என்னால்) வந்த சோதனை!” என்று எண்ணிக்கொண்டு, ”சரி பாடுகிறேன்(!) ஆனால் வந்திருக்கும் கூட்டம் ஓட்டம் பிடித்தால் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது!” என்று சொன்னேன் கவலையோடு. ”உங்கள் உரையைக் கேட்க அமர்ந்திருக்கும் மக்களை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறோம்…அவர்கள் எங்கும் ஓட முடியாது….கவலையை விடுங்கள்!” என்று எனக்கு அவர்கள் தைரியம் அளித்ததன் பேரில் பாடல் வரிகள் சிலவற்றைப் பாடச் சம்மதித்தேன். :-))
இவ்வாறு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் நடைபெற்ற அந்தத் தமிழ்விழா உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடந்தேறியது என்றுதான் கூறவேண்டும். அவ்விழாவை வெற்றி விழாவாக்கிய சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர், நண்பர் திரு. சோமு, தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர், நண்பர் திரு. அறவாழி (வள்ளுவத்திலிருந்த ஈடுபாடு காரணமாக அவர் தந்தையார் வைத்த பெயராம்!) ஆகியோருக்கு இத்தருணத்தில் மீண்டும் என் நன்றிகள்!
இனி, என் தந்தையின் உரையும், என்னுரையும் அடங்கிய காணொளிகள் உங்கள் கவனத்திற்கு…

திரு.ராமமூர்த்தி

மேகலா ராமமூர்த்தி


அன்புடன்,
மேகலா

0 comments: